ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது டி20 கிரிக்கெட்டையே மாற்றியதாகக் கூறிக்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஜாம்பவான்கள் ஒருவருக்கும் நல்ல பிட்ச்சில் ஆட முடியவில்லை என்பதுதான் நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற வெற்றியில் விளையும் உண்மையாகும்.
நல்ல கிரீன் டாப் பிட்ச்சில் குஜராத் பேட்டர்கள் சாய் சுதர்ஷன் (61), வாஷிங்டன் சுந்தர் (50) ஆகிய தமிழக வீரர்கள் கிளாசிக் கிரிக்கெட்டை வெளிப்படுத்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அதிரடி ஜாம்பவான்கள் பிட்ச்சின் பவுன்ஸ், ஸ்விங், வேகம், வேக மாற்றம் எதையும் கணிக்கத் தெரியாமல் மட்டையை அனாயசமாகச் சுழற்றி வீழ்வதைத்தான் பார்க்க முடிந்தது.
கேகிசோ ரபாடா, முகமது சிராஜ் கையில் சிவப்புப் பந்து இல்லாததுதான் குறை, மற்றபடி பந்துவீச்சு சிவப்புப் பந்தில் வீசும் முறையில்தான் வீசினர். தொடர்ச்சியாக 5வது போட்டியாக கேகிசோ ரபாடா, முகமது சிராஜ் பவர் ப்ளே முழுதையும் வீசினர். நேற்று இவர்கள் 6 ஓவர்களை வீசி முடிந்தபிறகு சன் ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 34/4. அங்கிருந்து எழுந்திருக்க முடியவில்லை 86 ரன்களுக்குச் சுருண்டது.
இவர்கள் போதாதென்று ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா மிடில் ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணியின் பேட்டிங் போதாமைகளை அம்பலப்படுத்தினர். ரபாடாவும் சிராஜும் 19 பந்துகளில் சன் ரைசர்ஸ் ஜாம்பவான்களான ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். 150 கிமீ வேகத்தில் வீசிய ரபாடா கடினமான லெந்த்தில் வீச அதிரடி ஜாம்பவான்களுக்கு ஒன்றும் புரியவில்லை, தெரியவில்லை என்றே கூற வேண்டும்.
அபிஷேக் சர்மா ரபாடாவை ஏதோ நெட் பவுலர் போல் ஒதுங்கிக் கொண்டு அடிக்கப் போனார். ஆனால் பந்தை அபிஷேக் உடலில் வீசி எழுப்பினார் ரபாடா பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டார் அபிஷேக். சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத்தின் இந்தப் பந்து வீச்சுத் திறன் முதல் முறையாக இந்தத் தொடரில் வெளிப்பட்டது, அன்றும் பிட்ச்சில் ஈரப்பதம், பவுன்ஸ் இருந்தது. ஜேசன் ஹோல்டர் அன்று 4 ஓவர் 22 ரன்களையே கொடுத்தார். அவர்தான் பிற்பாடு பிட்ச் பற்றிக் கூறிய போது, “ஈரப்பதமும், நல்ல கூர்மையான பவுன்சும் இருந்ததது” என்றார்.
இந்த ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ பிட்ச்கள்தான் வேகப்பந்து வீச்சிற்குச் சாதகமாக உள்ளது, இதில் அதிரடி சிக்சர் ஜாம்பவான்கள் மண்ணைக் கவ்வியதையே நாம் பார்த்தோம். இதுபோன்ற பிட்ச்களில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா, சிராஜ், ஹோல்டர், பிரசித் கிருஷ்ணாவை கொண்ட பவுலிங்கை எந்த அணியினாலும் எதிர்கொண்டு வாகை சூட முடியாது என்றே கூறலாம். டி20 அதிரடி பேட்டர்களுக்கு டெக்னிக் என்பது சுத்தமாக இல்லை.
நேற்று இந்த நிலையில்தான் சன் ரைசர்ஸ் அணியும் முழுதும் அம்பலமாகிப் போனது. நல்ல பவுலிங் பிட்ச்சில் ஆடும் திறனை டி20 அதிரடிக்காக நல்ல பேட்டர்களே இழந்து வருவது கிரிக்கெட் எதிர்கொள்ளும் அபாயம் என்பதை என்று உணர்வார்களோ?