

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்தகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், பிரியன்ஷ் ஆர்யா 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசினர். 211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் அக்சர் படேல் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், டேவிட் மில்லர் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது தோல்வியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: நான் சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை. மீண்டும் ஒருமுறை பீல்டிங் மற்றும் பந்துவீச்சு தான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர். பந்து ‘சீம்’ ஆன விதத்தையும், சீரற்ற பவுன்ஸ் இருந்ததையும் வைத்துப் பார்த்தபோது, இந்த ஆடுகளத்தில் நாங்கள் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்ததாகவே கருதினேன்.
இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் யுவேந்திர சாஹலை பந்துவீச அழைக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக என் மனதில் இருந்தது. ஆனால் பந்து ‘சீம்’ ஆன விதமும், அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த விதத்தையும் பார்த்த போது, சரியான லைன் மற்றும் லென்த்தில் துல்லியமாகப் பந்து வீசியிருந்தால் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் மீண்டும் அதைச் செய்யவில்லை.
நான் எப்போதும் சொல்வது போல், ஒரு புதிய பேட்ஸ்மேன் களம் இறங்கும்போது ஹார்டு லென்த்தில் வீசுவதுதான் சிறந்த பந்துவீச்சு. அதை அடிப்பது எளிதல்ல, ஏனென்றால் அதே போன்ற பந்துகளை தொடர்ந்து வீசும்போது, ஒரு பந்தாவது பேட்ஸ்மேனை தவறான ஷாட் விளையாடத் தூண்டும். அதன் மூலம் விக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் திட்டமிடுவதில் நாங்கள் பின்தங்கியிருக்கிறோம். இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.
இன்றைய ஆட்டம்
ஆர்சிபி - கொல்கத்தா
இடம்: ராய்ப்பூர்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோ ஹாட்ஸ்டார்