புதுடெல்லி: அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்துக்கும், களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவதற்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 25 வயதான அபிஷேக் சர்மா சமீப காலங்களில் டாப் ஆர்டர் வரிசையில் மிகவும் அதிரடியான பேட்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அதிக ஆபத்து நிறைந்த அதேசமயம் அதிக பலன் தரும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம், அடிக்கடி தனது அணிக்கு ஒரு மின்னல் வேகத் தொடக்கத்தைத் கொடுத்து வருகிறார்.
இருப்பினும் அந்த வேகமான தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் அவர், அடிக்கடி தடுமாறுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கூறியதாவது:
அபிஷேக் சர்மாவை நான், வீரேந்திர ஷேவாக் போன்ற வீரருடன் ஒப்பிடுவேன், ஏனென்றால் அவரும் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடவே நினைப்பார். ஷேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், அதன் பிறகு டி20 போட்டிகளுக்கும் மாறியபோது, தனது இன்னிங்ஸை சற்று வித்தியாசமான வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். இருப்பினும் ஷேவாக் 140-150 ஸ்டிரைக் ரேட்டிலேயே ரன்களைக் குவிப்பார்.
அபிஷேக் சர்மா இதைப் பற்றித்தான் யோசிக்கத் தொடங்க வேண்டும். நான் 200 ஸ்டிரைக் ரேட்டில் ரன் எடுத்து வருகிறேன், என் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன, இப்போது நான் 300 ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டுமா?’ என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளக் கூடாது. அவர், சாதாரணமாக இருந்தால் போதும். அதிகப்படியான பந்துகளைச் சந்தித்து விளையாட வேண்டும்.
அபிஷேக் சர்மா ஒரு இன்னிங்ஸில் 20 பந்துகள் விளையாடினாலே, அவர் 50 ரன்களை நெருங்கிவிடுவார். இதை நாம் சஞ்சு சாம்சனிடம் பார்த்திருக்கிறோம். அவர், 40 அல்லது 50 ரன்களில் ஆட்டமிழக்காமல், ஆட்டத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு சென்று 85 முதல் 90 ரன்கள் வரை குவித்து அந்த இன்னிங்ஸை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறார்.
டி20 போட்டிகளில் இதுதான் மிக முக்கியமானது. அத்தகைய ஒரு முதிர்ச்சியை இந்த சீசனில் அபிஷேக் சர்மாவிடம் நாம் காணலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அவரிடமிருந்து அதையேதான் எதிர்பார்க்கும். இவ்வாறு அனில் கும்ப்ளே கூறினார்.