ஆர்யவீர் சேவாக்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், தனது தந்தையின் புகழால் ஏற்படும் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, தனது கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
18 வயதான ஆர்யவீர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி பிரீமியர் லீக்கில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி 24 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அண்டர்-19 அணியின் தொடரில் இடம்பெற்றார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்களும், 2-வது போட்டியில் 47 ரன்களும் எடுத்தார். 3-வது போட்டியிலும் நன்றாகத் தொடங்கிய அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று போட்டிகளிலும் தொடக்கம் கிடைத்தபோதிலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ்டாருக்கு ஆர்யவீர் சேவாக் கூறியதாவது: “மூன்று போட்டிகளிலும் எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. கடைசி போட்டியிலும் நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், சிக்ஸ் அடிக்க முயன்றபோது ஆட்டமிழந்தேன். இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
ஒரு போட்டியை வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து அணுக வேண்டும் என்பதை இந்தத் தொடரில் கற்றுக்கொண்டேன். நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடினால்தான் பெரிய ரன்களை எடுக்க முடியும். கிரிக்கெட் உலகில் நமக்கென ஒரு பெயரையும் மரியாதையையும் பெற வேண்டும் என்றால் பெரிய ரன்கள் மிகவும் முக்கியம்.
எனது குடும்பப் பெயரையும், எனது தந்தையின் சாதனைகளையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால், என் தந்தையின் பெயர் எனக்கு எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் இந்தியாவுக்காக செய்த சாதனைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
மற்றவர்கள் என்னைப் பற்றி கூறும் கருத்துகள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அது பாராட்டாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி, அதனால் நான் அதிகம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
எனது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்காமல் எனது ஆட்டத்திலும், நான் பின்பற்றும் செயல்முறையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதுதான் எனக்கு சிறந்தது.
முதல் போட்டி சற்று சிரமமாகவே இருந்தது. மழை காரணமாக சுமார் 4 முதல் 5 மணி நேரம் வீரர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அது எனது அறிமுகப் போட்டி என்பதால் இயல்பாகவே பதற்றம் இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்ததால் உடலும் குளிர்ந்துவிட்டது.
ஆனால், சில பவுண்டரிகளை அடித்ததும் நம்பிக்கை வந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நல்ல வேகத்தில் பந்துவீசினர். அவர்களுக்கு எதிராக விளையாடியதை நான் மிகவும் ரசித்தேன். அது எனது நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
2-வது போட்டிக்கு முன்பு, ‘எதையும் சிக்கலாக்க வேண்டாம்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அண்டர்-19 இந்திய அணி, இந்தியா, ஆஸ்திரேலியா என்று எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளக் கூடாது. இது பேட்டுக்கும் பந்துக்கும் இடையிலான ஒரு சாதாரண ஆட்டம். அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.
எனது அறிமுகப் போட்டியைப் பார்க்க என் அப்பா மைதானத்துக்கு வந்திருந்தது எனக்குத் தெரியாது. நான் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பிய பிறகுதான், அணியின் மேலாளர், ‘உன் அப்பா மைதானத்தில் இருந்து உன் பேட்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்.
அன்றைய மாலை அவருடன் தொலைபேசியில் பேசினேன். முடிந்தவரை சுதந்திரமாக விளையாடு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதே, உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு என்றுதான் அவர் எனக்கு அறிவுரை கூறினார்.
பேட்டிங் குறித்து அவர் எப்போதும் மிகவும் எளிமையாகத்தான் கூறுவார். அடிக்கக்கூடிய பந்து கிடைத்தால் அடிக்க வேண்டும்; அடிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றால் விட்டுவிட வேண்டும்; தடுத்து ஆட வேண்டிய பந்து என்றால் தற்காப்பாக விளையாட வேண்டும் என்பார்.
ஒரு பேட்ஸ்மேனுக்கு ஷாட் தேர்வு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். என் மனதில் தெளிவு இருந்தால், போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.” இவ்வாறு கூறினார் ஆர்யவீர் சேவாக்.