

தாராபுரம்: தாராபுரம் பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனை முனைப் போட்டி நிலவி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களின் தீவிரப் பிரச்சாரங்களும், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினரின் அதிரடி சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சட்டம்-ஒழுக்கத்தைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய்யின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், ரோடு ஷோ நடைபெறும் இடங்களில் போலீஸார் நேற்று பாதுகாப்பு காரணங்களுக்காக அணிவகுப்பில் ஈடுபட்டனர்.