முகமது சிராஜ் என்னும் அயராத 3 வடிவ பவுலரை ஏ தொடருக்கு ஆட வைப்பதும், உட்கார வைப்பதும், அணியில் எடுத்து விட்டு லெவனில் உட்கார வைப்பதுமாக கேள்வி கேட்பாரன்றி அவர் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஆகாஷ் சோப்ரா சிராஜுக்காக உண்மையில் தான் வருந்துவதாகவும் அவர் இடத்தில் தான் இருந்தால் நிச்சயம் வெறுப்படைந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
கிரிக் இன்போ இணையதளத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, “ஏ அணியில் ஆடினார் என்பதெல்லாம் சரி. ஆனால், முதல் ஒருநாள் போட்டியின் போது சிராஜ் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அவர் ஆடுவதற்கு வாய்ப்பு பற்றி அணி நிர்வாகத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
கடந்த 35 மாதங்களில் முகமது சிராஜ் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். கடந்த 24 மாதங்களில் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். நடப்பு ஆண்டில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஆசியக் கோப்பையில் தனி நபராக இலங்கை அணியைப் பந்தாடினார் சிராஜ். மீண்டும் திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 6-7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023 உலகக் கோப்பையில் சிறப்பாகவே வீசினார்.
எனவே அவர் ஆட்டத்திறன் பற்றி எந்தவித கேள்வியும் இல்லை. இந்த ஆண்டு வெறும் 4 ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே ஆடியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது அவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டுகின்றனர் என்பது புரிகிறது. ஒரேயொரு முறை சாம்பியன்ஸ் டிராபியில் அவரை அணியில் தேர்வு செய்யாத போது அப்போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா பழைய பந்தில் சிராஜ் சரிப்படமாட்டார் என்றார். அந்த ஒரு விமர்சனத்தைத் தவிர வேறு விமர்சனங்கள் சிராஜ் பவுலிங் மீது இருந்ததில்லை.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஓகே, சிராஜ் எங்களுக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறீர்களா அதை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். சரி, அப்படியல்ல எனும் போது, 4 வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டு ஆடுகிறார்கள் ஆனால் பும்ரா, இல்லை பிரசித் கிருஷ்ணா இல்லை, அதே போல் சிராஜும் இல்லை என்று கூற முடியுமா? 6 பவுலர்களை எடுக்கிறார்கள், அதில் சிராஜ் இல்லை என்பது அதுவும் பும்ரா, பிரசித் கிருஷ்ணா இல்லை எனும் போது கொஞ்சம் யோசிக்கக் கடினமாகத்தான் உள்ளது.
அதனால் தான் இந்தச் சூழ்நிலையில் சிராஜ் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் வெறுப்படைவேன், விரக்தியடைவேன். அதாவது என் தோளின் மீது கையைப் போட்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என்னிடம் சொல்லாத பட்சத்தில் நிச்சயம் சிராஜ் இவ்வளவு நீண்ட காலம் தன்னை ஓரங்கட்டுவது குறித்து வெறுப்படையவே செய்வார்.
டெஸ்ட் போட்டிக்காக அவரை பாதுகாத்து வைக்கிறோம் என்று கூறினால் பின் ஏன் ஒருநாள் தொடர் அணியில் அவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படி தேர்வு செய்துவிட்டு ஏன் உட்கார வைக்கப்பட வேண்டும் என்பதே நம் கேள்வி. எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. ஒன்று டெஸ்ட் போட்டிக்காக பாதுகாக்கிறோம் என்றால் அங்கு டெஸ்ட் பயிற்சிக்கு அவர் சென்றிருக்க வேண்டும், இல்லையா, ஒருநாள் அணியில் இருக்கிறாரா லெவனில் ஆட வேண்டும். இங்கேயும் இல்லாமல், அங்கேயும் இல்லாமல் தர்க்கத்திற்குப் புறம்பாக உள்ளது” என்று சிராஜுக்காக வாதாடியுள்ளார் சோப்ரா.