சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் இன்று (15-ம் தேதி) எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் இந்த ‘ஏ’ டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதிக புள்ளிகளைப் பெறும் அணி லீக் சாம்பியனாக அறிவிக்கப்படும். அதேபோல், கடைசி இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தரம் குறைக்கப்பட்டு ‘பி’ டிவிஷனுக்கு மாற்றப்படும்.
மறைந்த சர்வதேச வாலிபால் முன்னாள் வீரரும், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஏ.கே.சித்திரைப்பாண்டியன் நினைவாக இந்த சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் ‘பி’ டிவிஷன் பிரிவில் வெற்றி பெற்ற அக்னி பிரண்ட்ஸ் கிளப் 2-வது இடம் பிடித்த சுங்கவரித்துறை ஆகிய அணிகள், இந்த ஆண்டு ‘ஏ’ டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த அணிகளுடன் எஸ்.ஆர்.எம்., ஐசிஎஃப், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, வருமானவரித்துறை, இந்தியன் வங்கி, ஐஓபி ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. கடந்த ஆண்டு எஸ்ஆர்எம் அணி முதலிடமும், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி 2-வது இடமும் பிடித்திருந்தன. இந்த தொடருக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.9 லட்சம் ஆகும். எஸ்என்ஜே குழுமம், ஆச்சி குழுமம், 2 குரோ ஹெச்ஆர், ரோமா குழுமம் ஆகியவை ஸ்பான்சர்களாக உள்ளன.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயமுருகன், அர்ஜூன் துரை, ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஜெகதீசன், பழனியப்பன், கேசவன் ஆகியோர் செய்துள்ளனர்.