வாசிம் ஜாபர் : கோப்புப்படம் 
விளையாட்டு

'ரஞ்சி நாயகன்' வாசிம் ஜாபர்: 41 வயதிலும் ரஞ்சிக் கோப்பையில் வரலாறு படைத்து அசத்தல்

ஏஎன்ஐ

வாசிம் ஜாபரையும், ரஞ்சிக் கோப்பையையும் பிரிக்க முடியாது. 41 வயதிலும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஜாபர், 12 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.

ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய எந்த ஒரு வீரரும் இதுவரை 12 ஆயிரம் ரன்களை எட்டியதில்லை. முதல் முதலாக இந்த வரலாற்றுச் சாதனையை வாசிம் ஜாபர் செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர், விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையான ரஞ்சிக் கோப்பையில் 150 ஆட்டங்களுக்கு மேல் களமிறங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றார்.

இதற்கு முன் இந்திய வீரர் தேவேந்திர பண்டேலா 145 முறையும், அமோல் மஜூம்தார் 136 முறையும் ரஞ்சிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இதுதான் அதிகபட்சமாகும். ஆனால், அனைத்தையும் வாசிம் ஜாபர் முறியடித்தார்.

இந்நிலையில் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் விதர்பா அணிககும், கேரள அணிக்கும் இடையிலான ரஞ்சிக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வாசிம் ஜாபர் சிறப்பாக ஆடிய ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

2019-20 சீசன் தொடங்கும் முன் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் வாசிம் ஜாபர் 11 ஆயிரத்து 775 ரன்களுடன் ஜாபர் இருந்தார். தற்போது 12 ஆயிரம் ரன்களைக் கடந்துவிட்டார்.

41 வயதாகும் வாசிம் ஜாபர், 1996-97 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். இதுவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடி 11 ஆயிரத்து 775 ரன்களை ஜாபர் சேர்த்துள்ளார்.

253 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 19 ஆயிரத்து 147 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 51.19 ஆக வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் வாசிம் ஜாபர் 40 சதங்கள் அடித்துள்ளார்.

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் வாசிம் ஜாபர் களமிறங்கியுள்ளார். இதில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாபர் 1,944 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடங்கும். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதமும் வாசிம் ஜாபர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT