பிரதமர் மோடி
புதுடெல்லி: விளையாட்டு ஜாம்பவான்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விவாத மேடை நிகழ்ச்சி ஜனவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் (விபிஒய்எல்டி) என்ற பெயரில் வளர்ந்த பாரதம் இளம் தலைவர்கள் விவாத மேடை நிகழ்ச்சி டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், பாட்மிண்டன் முன்னாள் சாம்பியன் புல்லேலா கோபி சந்த், டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டன் பயஸ் உள்ளிட்டோர் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய இளைஞர்கள் நாளாக கொண்டாடி வருகிறது. தேசிய இளைஞர் தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது விளையாட்டு ஜாம்பவான்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் எனத் தெரியவந்துள்ளது. 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நிலையை இந்தியா எட்டுவதற்கு, மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர் குழுவினர் தங்களது புதிய திட்டங்களை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பார்கள் என தெரியவந்துள்ளது.
விவாத மேடை நிகழ்ச்சியில் லியாண்டர் பயஸ், ஹர்மன் பிரீத் கவுர், கோபி சந்த் ஆகியோருடன் பாடகியும், அரசியல் வாதியுமான மைதிலி தாக்குர், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஷிரேயஸி சிங் உல்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஸோகோ நிறுவனரும், தொழிலதிபருமான ஸ்ரீதர் வேம்பு, விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோரிடமும் இளைஞர்கள் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.