மாட்ரிட்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி தாயகம் திரும்பியுள்ளது. இந்நிலையில், தங்கள் அணிக்கு அந்நாட்டு மக்கள் சுமார் 20 லட்சம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது ஸ்பெயின். அதற்கு காரணம் அந்த அணி வீரர்களின் அபார ஆட்டத்திறன்.
தடுப்பாட்டம், மிட்-பீல்ட் மற்றும் தாக்குதல் ஆட்டம் என அனைத்து இடங்களிலும் தரமான வீரர்கள் களமாடினர். அதன் பலன்தான் உலக சாம்பியன் பட்டம். இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி, வெறும் ஒரே ஒரு கோலை மட்டுமே ஸ்பெயின் அணி விட்டுக்கொடுத்தது. அதுதான் மற்ற அணிகளிடமிருந்து ஸ்பெயினை தனித்து நிற்க செய்தது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன் மூலம் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின்.
உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, திங்கட்கிழமை தாயகம் திரும்பியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் சுமார் 20 லட்சம் மக்கள் திரண்டு, தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
ஸ்பெயின் அணியின் 26 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் அந்நாட்டு அரச குடும்பத்தை சந்தித்தனர். தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
‘உங்கள் ஆட்டத்தை தேசமே ரசித்தது. உங்கள் ஆட்ட பாணிக்கும், முயற்சிக்கும், வெற்றிக்கும் நன்றி’ என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வாழ்த்தினார். அதன் பின்னர் ஸ்பெயின் அணியினர் திறந்தவெளி பேருந்தில் ஏறி மாட்ரிட் நகரில் வெற்றி உலா சென்றனர். அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்பெயினில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், கையில் குடையுடன் வந்த மக்கள், சிபெல்ஸ் சதுக்கத்தில் தங்களுக்கான இடங்களை முன்கூட்டியே பிடித்தனர். அங்கு வந்த ஸ்பெயின் வீரர்கள், மக்களுடன் தங்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியாக உள்நாட்டு மக்கள் முன்பு ஸ்பெயின் வீரர்கள் ஒன்றாக இணைந்து உலகக் கோப்பையை ஏந்தி இருந்தனர். அதோடு வெற்றி கொண்டாட்டம் நிறைவு பெற்றது. அடுத்த ஃபிபா உலகக் கோப்பை தொடர் (2030) ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.