இங்கிலாந்து அணி
பெர்த்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நாடகீயமான முறையில் 19 விக்கெட்டுகள் விழுந்த தினமானது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவிக்க, ஆஸ்திரேலியா இறங்கி தன் 9 விக்கெட்டுகளை வெறும் 123 ரன்களுக்கு இழந்து அல்லாடி வருகிறது.
ஆட்ட முடிவில் நேதன் லயன் 3 ரன்களுடனும் பிரெண்டன் டாக்கெட் பந்துகளை இன்னும் எதிர்கொள்ளாமலும் களத்தில் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் கமின்ஸ், ஹாசில்வுட் போன்ற முன்னணி பவுலர்கள் இல்லாவிடினும் மிட்செல் ஸ்டார்க் தனி நபராக இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார். அவர் 12.5 ஓவர்களில் 4 மெய்டன்களுடன் 58 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஆஷஸ் தொடர்கள்ல் 100 விக்கெட்டுகள் சாதனையையும் நிகழ்த்தினார்.
இங்கிலாந்து தரப்பில் ஆலி போப் 46 ரன்களையும் ஹாரி புரூக் 61 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்களையும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 33 ரன்களையும் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற இங்கிலாந்து 32.5 ஓவர்களில் 172 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா ஓப்பனிங் இறங்க முடியா சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் கவாஜா பெவிலியன் சென்று திரும்பினார். போதிய ஓவர்கள் அவர் களத்தில் நிற்கவில்லை என்பதால் ஓப்பனிங் இறங்க முடியாது என்பது விதிமுறை.
இதனால் பாவம்! அறிமுக வீரர் ஜேக் வெதரால்ட், சிங்கம் ஜோப்ரா ஆர்ச்சரின் தீப்பொறி முதல் ஓவரை எதிர்கொள்ள நேரிட்டு 2வது பந்திலேயே யார்க்கரில் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காலில் பந்தை வாங்கி எல்.பி. ஆகி வெளியேறினார். ஆர்ச்சர், அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் உட் ஏத்து ஏத்தென்று ஏத்த ஆஸ்திரேலியா பேட்டர்கள் வழிந்து கொண்டிருந்தனர். 5வது ஓவரில்தான் முதல் ரன்னே வந்தது என்றால் பந்து வீச்சு எப்படி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்களை எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் 21 ரன்களை எடுத்தார். லபுஷேன் 41 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களையே எடுக்க முடிந்தது, ஸ்டீவ் ஸ்மித்தும் அவரும் போராடி நிலை நிறுத்தப் பார்த்தனர், ஆனால் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு மணிக்கு 148-150 என்று தீப்பொறி பறந்தது.
ஆர்ச்சர் ஒரு பந்தை மணிக்கு 152 கிமீ வேகம் வீச மார்க் உட் தனது ஓவர்கள் அனைத்தையும் 148 கிமீ வேகத்தில் சராசரியாக வீசினார். பிட்சின் உதவியுடன் ஒன்றுமே செய்ய முடியவில்லை, கடைசியாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வந்து டிராவிஸ் ஹெட்(21) கேமரூன் கிரீன்(24), அலெக்ஸ் கேரி (26), ஸ்டார்க் (12), போலண்ட் (0) ஆகியோரை வீழ்த்தி 6 ஓவர்களில் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இங்கிலாந்தில் பெரிதும் எதிர்பார்த்த கிராலியும் ஜோ ரூட்டும் டக் அவுட் ஆகினர். இருவரும் அவுட் ஆன பந்து அற்புதமான ஸ்டார்க் பந்தாகும். இங்கிலாந்து கடைசி 5 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கு இழந்தது. ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் தன் கடைசி 3 விக்கெட்டுகளை 3 ரன்களுக்கு இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் ஆர்ச்சர் 2, பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகள்.
ஆஷஸ் தொடரில் ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் விழுவது இதுதான் முதல் முறை.