

பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள்
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் ஆர்.எஸ்.கே பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் வென்ற பதக்கங்கள், சான்றிதழ்கள் சொந்த ஊர் திரும்பும் வழியில் ரயிலில் திருடு போனதால் சோகத்தில் மூழ்கினர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 260 சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொழிற்சாலையின் தொழிலாலர்கள் குடியிருப்பான கைலாசபுரம் வளாகத்தில் இயங்கி வரும் ஆர்.எஸ்.கே (சி.பி.எஸ்.இ) பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
கராத்தேயின் குமிதே பிரிவில் பிரணவ் குமார் வெள்ளிப் பதக்கமும், நிகிலேஷ், சிவேஷ் மற்றும் ரோகித் ஆகிய மூவரும் வெங்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்த நிலையில் பதக்கம் வென்ற வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தங்களது உடைமைகளுடன் தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் அந்தியோதயா ரயிலில் ஏறினர். நேற்று அதிகாலை விருத்தாச்சலம் ரயில் நிலையம் வந்தபோது தங்களது சான்றிதழ்கள், பதக்கங்கள் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ரயில்வே போலீஸுக்கு ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை இவர்கள் ரயில் மூலம் திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்து இறங்கினர்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய கராத்தே மாணவர்களுக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயிற்சியாளர் ஆனந்தகுமார் தலைமையில் பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரயிலில் பதக்கம், சான்றிதழ்கள் திருடு போன தகவலறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இது குறித்து மாணவர்கள் கூறும்போது, முதல்முறையாக தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
அதேசமயம், பதக்கங்கள், சான்றிதழ்கள் திருடுபோனது கவலையாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராகி இன்னும் பல பதக்கங்களை வென்று பள்ளி, தமிழகம், தாய் நாடு ஆகியவற்றுக்கு பெருமை சேர்ப்போம். இவ்வாறு தெரிவித்தனர்.