ஹைதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70, ஜானி பேர்ஸ்டோ 37, பென் டக்கட் 35 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 110 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 155 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் அக்சர் படேல் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
அடுத்த 10 ஓவர்கள் மட்டுமே இந்திய அணியின் இன்னிங்ஸ் நீடித்தது. சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜடேஜா 87 ரன்கள் எடுத்திருந்தபோது ரூட் பந்தில் அவுட் ஆனார். அடுத்துவந்த பும்ராவையும் ரூட் வெளியேற்ற, கடைசி விக்கெட்டாக 44 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல் ரெஹான் அகமது பந்துவீச்சில் க்ளீன் பவுல்டு ஆனார். இதனால் 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. மேலும் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட், ரெஹான் அகமது மற்றும் டாம் ஹார்ட்லி தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.