டெல்லி: உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் காயம் ஏற்பட்டதை அடுத்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நேற்றைய போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு இடது கை விரலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுக்க உள்ளார். இலங்கைக்கு எதிராக முதலில் வங்கதேசம் பந்துவீசியது. இதில் 10 ஓவர்கள் வீசிய ஷகிப் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். பந்துவீசும்போதே அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. என்றாலும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு பேட்டிங் செய்த அவர், 82 ரன்கள் எடுத்து அணி வெற்றிபெற காரணமாக அமைந்தார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளை பெற்றுள்ள வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
எனினும், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அந்த அணி. உலகக் கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியும் என்பதால் வங்கதேசம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஷகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.