அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது. பவுலிங்கில் ஓரளவு கட்டுப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு 287 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ட்ராவிஸ் ஹெட் 2ஆவது ஓவரிலேயே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து டேவிட் வார்னரும் நிலைக்காமல் 15 ரன்களில் கிளம்பினார். மார்னஸ் லாபுசாக்னே - ஸ்டீவன் ஸ்மித் இணை தாக்குப் பிடித்து ஆடினாலும், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடில் ரஷீத் வீசிய 22-வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களில் விக்கெட்டானார்.
ஜோஷ் இங்லிஸ் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்திருந்தது ஆஸ்திரேலியா. மார்னஸ் லாபுசாக்னே 71 ரன்களையும், கேமரூன் கிரீன் 45 ரன்களையும் சேர்த்துவிட்டு கிளம்ப, அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மார்கஸ் ஸ்டோயினிஸ் 35 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 10 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களிலும், ஆடம் ஜம்பா 29 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டாகி வெளியேற, 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 286 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட், அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.