ODI WC 2023 | ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி 2 தோல்வி, 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. டேவிட் வார்னர் 2 சதங்களுடன் 413 ரன்கள் குவித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள டிராவிஸ் ஹெட் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இவர்களிடம் இருந்து மேலும் ஒருசிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோரும் ரன்கள் சேர்க்க தொடங்கி உள்ளது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் களமிறங்காததால் அவர்களுக்குப் பதிலாக கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாயினிஸ் களமிறங்கக் கூடும்.

பந்து வீச்சில் ஆடம் ஸம்பா 16 விக்கெட்களை வீழ்த்திஅதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் அவர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குநெருக்கடி தரக்கூடும். மிட்செல்ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஸ்ஹேசில்வுட் ஆகியோரும் சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 6ஆட்டங்களில் 5 தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி முதல் 7 இடங்களுக்குள் நுழைந்து தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் 2025-ம்ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு உலகக் கோப்பை தொடரில் முதல்7 இடங்களை பெறும் அணிகள்தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்த இடத்தில்.. உலகக் கோப்பை தொடரை தோல்வியுடன் தொடங்கிய மைதானத்திலேயே இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது இங்கிலாந்து அணி. கணிசமான வெற்றிகளை பெறுவதற்கு முனைப்பு காட்டும் அந்த அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த இரு ஆட்டங்களிலும் விளையாடாத ஹாரி புரூக் மற்றும் ரீஸ் டாப்லேவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்டுள்ள பிரைடன் கார்ஸ் ஆகியோர் களமிறங்கக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in