விளையாட்டு

“சொல்வதற்கு எப்போதும் நேர்மாறாக செய்வார்” - சேவாக்கை வாழ்த்திய சச்சின்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்தவர்கள் சச்சின் மற்றும் சேவாக். இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டங்கள் இந்திய ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காதவை. ஓப்பனிங் வீரர்களாக இருவரும் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். களத்துக்கு வெளியேயும் சேவாக் - சச்சின் இடையே நல்ல நட்பு உண்டு. தற்போது இருவரும் ஓய்வுபெற்றுள்ள நிலையில் இருவரும் அவ்வப்போது களத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

இன்று சேவாக் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் சச்சின், "நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படியும், கிரீஸில் இருக்கும்படி கூறினேன். அதற்கு "சரி" என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தையே பவுண்டரிக்கு அடித்தார். எப்போதும் நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, அவருக்கு அதே ஸ்டைலில் சொல்கிறேன், தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில், 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களில் அவுட்டான சச்சின் சதத்தை தவறவிட்ட கதையை சேவாக் வெளிப்படுத்திருந்தார்.

அதன் பின்னணியை ஒரு தசாப்தம் கழித்து வெளிப்படுத்திய வீரேந்திர சேவாக், “பெவிலியன் திரும்பியதும் ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்’ என சச்சின் என்னிடம் கூறினார். நான், ‘ஏன்’ என்று கேட்டதற்கு, ’நான் சதம் அடிப்பதற்கு முன்பே அவுட் ஆனது நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள். நான் சதம் அடித்திருந்தால் அணி தோல்வி அடைந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்’ என சச்சின் கூறினார்.

உடனே நான், ’என் மனதில் உள்ளதை எப்படி கூறினீர்கள். நீங்கள் இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்துள்ளீர்கள். அதில், ஒன்றில் நாம் தோல்வியடைந்தோம். மற்றொன்று சமன் ஆனது’ என சச்சினை நோக்கி கூறினேன்" எனத் தெரிவித்த சேவாக், "கடவுளுக்கு நன்றி. நல்ல வேலையாக சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடிக்கவில்லை. அதனால் நம்மால் உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது” என்று கலாய்த்தார்.

SCROLL FOR NEXT