

டெல்லி: 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வைப் பற்றி கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சச்சின், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். அப்போட்டியில் 85 ரன்களில் அவுட்டான சச்சின் சதத்தை தவறவிட்டார். சச்சின் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய சமயத்தில் அவரும், சக வீரர் சேவாக்கும் ஒருவரை ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
இந்த புன்னகைக்கான பின்னணியை ஒரு தசாப்தம் கழித்து வெளிப்படுத்தியுள்ளார் வீரேந்திர சேவாக். சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் இதனைப் பற்றி மனம் திறந்துள்ளார். அந்த நிகழ்வில், “பெவிலியன் திரும்பியதும் ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்’ என சச்சின் என்னிடம் கூறினார். நான், ‘ஏன்’ என்று கேட்டதற்கு, ’நான் சதம் அடிப்பதற்கு முன்பே அவுட் ஆனது நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள். நான் சதம் அடித்திருந்தால் அணி தோல்வி அடைந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்’ என சச்சின் கூறினார்.
உடனே நான், ’என் மனதில் உள்ளதை எப்படி கூறினீர்கள். நீங்கள் இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்துள்ளீர்கள். அதில், ஒன்றில் நாம் தோல்வியடைந்தோம். மற்றொன்று சமன் ஆனது’ என சச்சினை நோக்கி கூறினேன்" எனத் தெரிவித்த சேவாக், "கடவுளுக்கு நன்றி. நல்ல வேலையாக சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடிக்கவில்லை. அதனால் நம்மால் உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது” என்று கலாய்த்தார்.