கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முந்தி விநாயகர்.
கோவை: விநாயகர் சதுர்த்தியொட்டி, 2 டன் மலர்கள், 50 கிலோ சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் புலியகுளம் முந்தி விநாயகர் இன்று (செப்.14) பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை மாவட்டம் புலியகுளத்தில் முந்தி விநாயகர் கோயில் உள்ளது. ஆசியாவிலேயே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை இங்கு உள்ளது. 190 டன் எடையில், 19 அடி உயரத்தில், 10 அடி அகலத்தில் கம்பீரமாக விநாயகர் இங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, புலியகுளம் முந்தி விநாயகர் கோயில் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. வழிபாடு, வேள்வி பூஜைகள், மஹா அபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர், 2 டன் மலர்கள், 50 கிலோ சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் முந்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அது மட்டுமின்றி மயில் தோகை போன்ற மாலை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.
மேலும், விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இனிப்புகள் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. சதுர்த்தியையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 40-க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழித்தடத்தில் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.