குமுளி: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ. 17-ம் தேதியிலிருந்து மண்டல வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து,சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்நிலையில், சபரிமலைக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று நிலக்கல், பம்பை, நீலிமலை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. பலரும் முன்பதிவு செய்த தேதியில் வராமல் வேறு தேதியில் தரிசனத்துக்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இவர்களை ஸ்பாட் புக்கிங் மூலம் மீண்டும் பதிவு செய்து வரச் சொன்னதால் தாமதம் ஏற்பட்டது.
முன்பதிவு செய்யாமல் ஏராளமானோர் ஸ்பாட் புக்கிங்கில் வந்தனர். இதுபோன்ற காரணங்களால் சபரிமலையில் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. வழக்கமாக 4 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கு தற்போது 6 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இவற்றை பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மெகா போன் மூலம் அறிவிப்பு செய்யும் நடைமுறையை சந்நிதான சிறப்பு அதிகாரி பி.பாலகிருஷ்ணன் நாயர் நேற்று தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால், அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தரிசனம் முடித்த பக்தர்கள் உடனடியாக வெளியேறிச் செல்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. மாளிகைப்புரம், மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புகைப்படம், வீடியோ எடுப்பதில் பக்தர்கள் ஆர்வம் காட்டுவதால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க 18-ம் படி, திருமுற்றம் உட்பட சந்நிதானத்தின் எந்த இடத்திலும் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
குளுக்கோஸ் வழங்க ஏற்பாடு: சபரிமலை பெரிய நடைப்பந்தல் அருகே பக்தர்களுக்கான உதவி மையத்தில் குளுக்கோஸ் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு குளுக்கோஸ்விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவசர மருத்துவ தேவைக்கு உதவி மைய எண் 14432 அல்லது 04735 203232 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.