ஆன்மிகம்

ஏழுமலையான தரிசனம் செய்ய வாணி அறக்கட்டளை டிக்கெட் வழங்குவதில் தடங்கல்

என். மகேஷ்குமார்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கும் முறையை கடந்த 9-ம் தேதி அமல்படுத்தியது. சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதே நாள் காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது ரூ.10,000 நன்கொடையை முதலில் அனுப்பி, பெயரை ஆதார் அட்டையின் எண்ணுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்கொடை ஏற்கப்பட்டதாக தகவல் வந்ததும், ரூ.500 செலுத்தி டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற வேண்டும். அப்படி பெற்று கொண்ட பக்தர்களுக்கு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி வருகின்றனர். இதற்காக தினமும் திருமலையில் 800 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது.

ஆனால் ரூ.10,000 நன்கொடை வழங்கிய பின்னர், ரூ.500-க்கு டிக்கெட் எடுக்க தகவல் வரவில்லை என பல பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விநியோகம் தனியார் வங்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவஸ்தானம் விரைவில் நடவடிக்கை எடுக்கவும், ரூ.300 டிக்கெட்டுகளை தினமும் 5000 வரை திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்காக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT