திருமலை: பராபவ நாம தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முகப்பு கோபுரம், பலிபீடம், தங்க கொடிமரம், உப சன்னதிகள் மற்றும் கோயில் வெளிப்புறத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஏழுமலையான், மச்சாவதார சிலைகள் வைத்து வண்ணமிகு மலர்க்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கும் புதிய பட்டாடை உடுத்தி, சேனாதிபதியான விஸ்வக்சேனருடன் கருடன் சன்னதி அருகே கொண்டு வந்து, அங்கு புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அப்போது இந்த ஆண்டு பலன்களை வேத பண்டிதர்கள் கூறினர்.
பிறகு பக்தர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் ‘உகாதி பச்சடி’ பிரசாதமாக வழங்கப்பட்டது. கடப்பா மாவட்டம், தேவுன்னி கடப்பா பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரர் திருக்கோயிலிலும் நேற்று உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது, அந்த ஊரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பெருமாளை வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பீபி நாச்சியார் சமேதமாக உள்ள பெருமாளை வழிபடுவது இங்குள்ள இஸ்லாமியர்களின் வழக்கம். பெருமாளை இவர்கள் தங்கள் வீட்டு மருமகனாக பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.