மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.| படங்கள்: ம.பிரபு |
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளன்று பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து, அன்னை கற்பகாம்பாள் மயில் வடிவில் காட்சி தரும் அற்புத நிகழ்வும், சுவாமி, அம்பாள், முருகப் பெருமான் வீதி உலாவும் நடைபெற்றன. அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில், பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. 96 அடி உயரம், 300 டன் எடைகொண்ட பிரம்மாண்டத் தேரில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் காலை 6 மணிக்கே எழுந்தருளினர்.
6.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் தொடங்கியது. அலைகடலெனத் திரண்டிருந்த பக்தர்கள் ‘சம்போ மகாதேவா’ என்ற முழக்கத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.
சிவ வாத்தியங்கள் முழங்க, நான்கு மாடவீதிகளிலும் கம்பீரமாக அசைந்தாடி வந்த தேர் காலை 11 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் மாட வீதிகளில் பந்தல்கள் அமைத்து, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான‘அறுபத்து மூவர்’ விழா இன்று மதியம் 3 மணி அளவில் தொடங்குகிறது.
வெள்ளி விமானத்தில் சிவபெருமான் 63 நாயன்மார்களோடு வலம் வரும் காட்சியைக்காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஏப்.1-ம் தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 3-ம் தேதி விழா நிறைவுத் திருமுழுக்கு (தீர்த்தவாரி) நடைபெற உள்ளது. ஏப்.10-ம் தேதி வரை விடையாற்றி விழா உற்சவமும் நடைபெறுகிறது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மற்றும் மல்லீஸ்வரர் கோயில்களிலும் நேற்று தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.