திருவண்ணாமலை | கோப்புப் படம் 
ஆன்மிகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஐகோர்டில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை!

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தமிழக டிஜிபி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தீபத் திருவிழாவுக்காக, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், கிரிவல பாதையில் பக்தர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கவும், பணம் பறிப்பதை தடுக்கவும் சிறப்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 20 துறைகளுடன் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,325 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏதுவாக, 24 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்; 19,815 கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக 130 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு கழிவுநீர், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பக்தர்கள் வசதிக்காக 4,764 சிறப்பு பேருந்துகள், வெளி மாநில பக்தர்களுக்காக 520 பேருந்துகளும், 16 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 303 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட 1,060 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விழா சுமூகமாக நடப்பதை உறுதி செய்யவும், மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT