திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களாக காலை, இரவு ஆகிய இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.
பிரம்மோற்சவத்தின் உச்ச கட்ட நிகழ்ச்சியான கருட சேவைக்கு திரளான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை, கோயில் தெப்பக்குளத்தின் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன.
அதன் பின்னர் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தியுடன் புனித நீராடினர். நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் தெப்பக்குளத்தில் புனித நீராடினர். இதனை தொடர்ந்து நேற்று மாலை கோயிலில் ஏற்றப்பட்ட கருடன் சின்னம் பொறித்த கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.