வேளாங்கண்ணியில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையையொட்டி, பிப்.18-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில், கிறிஸ்தவ மக்கள் தென்னங்கீற்றிலான குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். அதன்படி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனி நேற்று காலை நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, குருத்தோலைகளை ஏந்தி ‘உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா’ என்று பாடலை பாடியபடி பவனியாகச் சென்றனர்.
பேராலய முகப்பு பகுதியில் இருந்து வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனி, பேராலய கீழ் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து, பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.