திருவையாறில் நேற்று தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆண்டு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் இசையஞ்சலி செலுத்திய கலைஞர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ் |
தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடியும், இசைத்தும் சத்குரு தியாகராஜர் சுவாமிக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இங்கு தியாகராஜர் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விழாவைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஏராளமான இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உஞ்ச விருத்தி ஊர்வலம்: நிறைவு நாளான நேற்று தியாகராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்ச விருத்தி ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலச்சந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.
பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, பின்னி கிருஷ்ணகுமார், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு, ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பி.சுசித்ரா குழுவினரின் ஹரி கதை, தாமல் ராம கிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தியாகராஜ சுவாமிகள் வீதியுலாவுக்குப் பின், ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.