கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்த விழா, கடந்த நவ.24-ம் தேதி இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
கடந்த நவ.25-ம் தேதி காலை கொடியேற்றம், தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளுதலும்,இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.டிச26-ம் தேதி முதல் டிச.5-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
பிரதான நிகழ்ச்சியான நேற்று (டிச.3) காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி-தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
ஏராளமானோர் பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, தீபக்காட்சி ஆகியவையும் நடைபெற்றது.
டிச.4-ம் தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு அவரோகணமும், டிச.5- ம் தேதி இரவு வள்ளி, தேவசேனா உடனாய சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தலும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.