திண்டுக்கல்: திருக்கார்த்திகையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் இன்று (டிச.3) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது.
நேற்று (டிச.2) கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று புதன்கிழமை (டிச.3) திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை முடிந்து, சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. வெளிப் பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளால் இரவில் மலைக்கோயில் ஜொலித்தது. கார்த்திகை தீபத்தை காண திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், மாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.