ஆன்மிகம்

சபரிமலையில் பாரம்பரிய நாட்டியக் கலை ‘கதகளி’ மூலம் ஐயப்பனின் மகிமைகள் விளக்கம்!

என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலை கலையரங்கில் ஐயப்பனின் வாழ்க்கை வரலாறு கதளி எனும் பாரம்பரிய கலை மூலம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. இதில் எருமை தலை மகிஷியை வதம் செய்தது, புலிப்பால் கொண்டு வருவது உள்ளிட்ட பல காட்சிகளை இசை பின்னணியுடன் கலைஞர்கள் நடித்துக் காட்டினர்.

சபரிமலை சந்நிதானம் பெரியநடைப்பந்தல் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு மண்டல, மகர விளக்கு காலங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு போலீஸ் இசைக்குழு கச்சேரி, களரி தற்காப்பு கலை, பழங்குடியினரின் பாரம்பரிய நடனம், பழங்கதைகளைக் கூறும் கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக நேற்று (டிச.11) ஐயப்ப சுவாமியின் ஜென்ம பிறப்பு, வாழ்க்கை முறை, அவர் நிகழ்த்திய அற்புதம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இசையுடன் கூடிய நாடக வடிவில் நடித்துக் காட்டப்பட்டது. 61 வயதுடைய மூத்த கலைஞர் கலாமண்டலம் பிரசாந்த் என்பவர் மகிஷி எனும் அரக்கி வேடத்திலும், பாலக ஐயப்பனாக 7 வயது நிரம்பிய அத்வைத் பிரசாந்த் ஆகியோர் நடித்தனர்.

இதில் ஐயப்பன் தனது சிறுவயதில் தாயின் நோய்தீர்க்க புலிப்பால் தேடி எருமேலிக்கு வருவது, அங்கு எருமை தலையுடன் கூடிய மகிஷியை வதம் செய்வது, தவக்கோலத்தில் அமர்வது, பரசுராமனால் ஆலயம் எழுப்பப்படுவது, இவருக்கு காவலாக கருப்பசாமி தனது பரிவாரங்களுடன் வருவது என்று பல காட்சிகள் விளக்கப்பட்டன.

மது, நிதின் பாலச்சந்திரன், ஆரோமல், அபிஷேக் உள்ளிட்ட பலரும் பல கதாபாத்திரங்களில் நடித்தனர். கதகளி எனும் கேரள பாரம்பரிய கலை வடிவில் நாட்டிய நாடகமாக இது நிகழ்த்தப்பட்டது. மத்தளம், செண்டை மேளம், குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க நாடக கலைஞர்கள் முகபாவனை, அபிநயம் மூலம் காட்சிகளை வெளிப்படுத்தினர். இந்த கலைநிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

SCROLL FOR NEXT