இந்திய டி20 அணியில் ஆட்டம் காணும் சூரியகுமார் யாதவின் இடம்!

இந்திய டி20 அணியில் ஆட்டம் காணும் சூரியகுமார் யாதவின் இடம்!
Updated on
2 min read

கவுதம் கம்பீர் பேச்சைக் கேட்டுக் கொண்டு அணியின் வீரர்கள் இறங்கும் வரிசையில் ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்து வரும் சூரியகுமார் யாதவ்வின் இடமே இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

2024-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகே சூரியகுமார் 20 டி20 இன்னிங்ஸ்களில் வெறும் 227 ரன்களையே அடித்துள்ளார். எப்படி இவரை அணியில் வைத்துள்ளார்கள் என்பது பெரிய கேள்விக்குறி, இதே சலுகையை யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்றோருக்கு அளிப்பாரா கம்பீர்? எத்தனையோ இளம் அதிரடி வீரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

இஷான் கிஷன், வைபவ் சூரியவன்ஷி, பிரியன்ஷ் ஆரியா, ஆயுத் மாத்ரே என்று எக்கச்சக்கமாக கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் போது தடுமாறும் வயதான குதிரை சூரியகுமார் யாதவ்வை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே வலுத்து வருகிறது.

நவம்பர் 2024-க்குப் பிறகே அவரது சராசாரி வெறும் 13 தான். ஸ்ட்ரைக் ரேட்டும் கடுமையாகச் சரிந்து 120 என்றுதான் உள்ளது. ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களில்தான் 20 பந்துகளைத் தாண்டியிருக்கிறார் என்றால் இவர் கேப்டனா என்ற கேள்வி எழுவது நியாயம் தானே? நேற்று பயங்கரமான பவுலராக உருவெடுத்து வரும் மார்க்கோ யான்சென் இவரது இன்னிங்ஸை 5 பந்துகளுக்கு மிகாமல் பார்த்துக் கொண்டார்.

நவம்பர் 2024-க்குப் பிறகே இந்திய அணி நேற்று 4-வது டி20 தோல்வியையே சந்தித்துள்ளது என்றாலும், சூரியகுமாரின் பங்களிப்பு என்ன? அவர் கேப்டனாக நீடிக்கலாமா போன்ற கேள்விகளை வலுப்படுத்துகிறது.

நேற்று திடீரென 3-ம் நிலையில் அக்சர் படேலை இறக்குகின்றனர், அவர் என்ன விவ் ரிச்சர்ட்ஸா, அல்லது கபில்தேவா? அவர் திணறு திணறு என்று திணறி 21 பந்துகளில் 21 என்று வெளியேறினார், 4-ம் நிலையில் வந்த சூரியகுமார் யாதவ் விரைவு கதியில் வெளியேறினார்.. எதற்காக இந்த டவுன் ஆர்டர் மாற்றம்? கேள்வி கேட்பாரே இல்லையா?

இன்னொரு வேஸ்ட் வீரர் ஷுப்மன் கில், இவரை எதற்காக இப்படி தூக்கிப் பிடிக்கின்றனர் என்பதற்கு ஒரே ஒரு பதில் ‘குஜராத்’ லாபி. அதாவது குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் மார்க்கெட் மதிப்பை உயர்த்த அதன் கேப்டனனா கில்லின் மதிப்பை உயர்த்துவதற்காக தேசிய அணியை களமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர் நேற்று டக் அவுட் ஆனார்.

ஒன்று திலக் வர்மாவை 3-ம் நிலையில் இறக்கியிருக்க வேண்டும், 52 டி20 இன்னிங்ஸ்களில் இப்போது முதல் முறையாக அக்சர் படேலை 3-ம் நிலையில் இறக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில்?

இவரும் சரி ஷிவம் துபேயும் சரி ஸ்பின் பந்து வீச்சை நன்றாக ஆடுபவர்கள், விரைவில் ஸ்கோர் செய்யக் கூடியவர்கள், ஆனால் அக்சர் படேலோ, ஷிவம் துபேயோ இறக்கிவிடப்பட்ட டவுனில் ஸ்பின் பந்துகளை அதிகம் எதிர்கொள்ள முடியாமல் போனது என்ன கேப்டன்சி, என்ன பயிற்சியாளர் மூளை? என்ற கேள்வி எழுகிறது.

நவம்பர் 2024-க்குப் பிறகே சூரியகுமார் யாதவ் வேகப்பந்து வீச்சில் 17 முறை ஆட்டமிழந்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரேஒருமுறைதான் ஸ்பின்னில் வீழ்ந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ்வின் இடம் கடும் கேள்விக்குறியாகியுள்ளது. மாற்று வீரர்கள் இருக்கும் போது இவரை ஏன் இன்னும் நம்பிக்கொண்டிருக்க வேண்டும்?

இந்திய டி20 அணியில் ஆட்டம் காணும் சூரியகுமார் யாதவின் இடம்!
டி20 உலகக் கோப்பை டிக்கெட் விலை குறைந்தபட்​சம் ரூ.100

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in