தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும் இலவச மாக தரிசனம் செய்யலாம். என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26-ம் தேதி காலை 9.50-க்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜன.31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.1-ம் தேதி தைப்பூசத்தன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகநதிக்கு எழுந்தருளல், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றம், மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறஉள்ளது. பிப்.4-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் திருச்செந்தூர், பழநி உட்பட 10 கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மிக மிக முக்கியப் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் என்று முன்னுரிமை இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.