பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவில் நேற்று முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன. 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்களிலும் பழநி வந்த வண்ணம் இருக்கின்றனர்.
விழாவின் 6-ம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருள்கிறார். பின்னர், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மேல் தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் பிப். 4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழாவும் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்து வருவதால், போலீஸார் பாதுகாப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.