சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக, சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சைவ, வைணவ ஒற்றுமையை விளக்கும் இவ்விழாவில், நேற்று காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. காலை 7.05 மணிக்கு அம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் 9-ம் நாளான ஜூலை 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடித்தபசு ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜூலை 28 மாலை 6.05 மணிக்கு மேல் ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில், சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார். இரவு 11.45 மணிக்கு மேல் யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூலை 29-ம் தேதி சுவாமி, அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தாவர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, திலீபன் ஜெய்சங்கர் எம்எல்ஏ, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கவுசல்யா, நகராட்சி ஆணையர் லெட்சுமி, கோயில் இணை ஆணையர் சுரேஷ், துணை ஆணையர் ரோஜாலி சுமதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.