வேளாங்கண்ணியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற அருட்தந்தைகள்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, பேராலயத்தில் நேற்று காலை முதல் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கொங்கணி உள்ளிட்ட மொழி களில் திருப்பலி மற்றும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ், நிர்வாக தந்தை பரிசுத்தராஜ் உள்ளிட்டோர் பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், பேராலய வளாகம், கடற்கரை, மாதா குளம் உட்பட வேளாங்கண்ணி முழுவதும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.