கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.
சென்னை/திருவள்ளூர்/காஞ்சி: திருப்போரூர், சிறுவாபுரி, கந்தகோட்டம், வடபழனி உள்ளிட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தணியில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை 6 மணிக்கு நடைபெற்ற மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணியளவில், சூரபத்மனை வதம் செய்வதற்காக அம்பாளிடமிருந்து வேல் பெறும் நிகழ்வும், சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான்.
இதேபோல், சென்னை கந்தகோட்டம் முருகன் கோயிலிலும் நேற்று சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதேபோல் சென்னை முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல முருகப்பெருமான் ஆகாய மார்க்கமாகச் சென்று சூரபத்மனை வதம் செய்த திருத்தலமாகப் போற்றப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் திருத்தணி மலையில் சினம் தணிந்தார் என்பது ஐதீகம். எனவே மற்ற முருகன் கோயில்கள் போல் இல்லாமல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புஷ்பாஞ்சலி விழா நடைபெறும்.
அந்த வகையில் நேற்று திருத்தணியில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நேற்று அதிகாலை மூலவர் முருகப்பெருமான் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழக அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 5 டன் மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
இதேபோல பொன்னேரி வட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் நேற்று சூரசம்ஹார உற்சவம் கோயில் எதிரே சந்நிதி தெருவில் நடைபெற்றது.