கோப்புப் படம்

 
ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி | புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: நாடு முழுவதும் இன்று (14ம் தேதி) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணை நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவர், உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சாமி வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன.

இந்தாண்டு விஐபிகள் தரிசனம் செய்வதற்கு தனி வழியும், சர்வ திவ்ய தரிசனத்துக்கு தனி வழியும் அமைக்கப்பட்டது. மேலும், இந்து அறநிலையத்துறை அனுமதியுடன் இன்று ஒருநாள் மட்டும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தவிர்த்து, தனி நபர் ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் மிதமான மழை பெய்த போதிலும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 16 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட நடை மதியம் 2 மணிக்கு மூடப்பட்டு, பிறகு மதியம் 3 மணிக்கு பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT