சபரிமலையில் தினமும் கூடுதலாக 10,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தங்களுக்கு தேவைப்படும் தரிசன தேதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெற உள்ளது. அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்கான மண்டல வழிபாடுகள் கடந்த 17-ம் தேதி தொடங்கின.
தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதை விட கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்பேரில், ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால், நெரிசல் படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜனவரி 10-ம் தேதி வரை முடிந்துவிட்டன.
இதனால், பயணத்தை முன்னதாக திட்டமிடாத பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து, ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சபரிமலையில் தேவசம் போர்டு மற்றும் போலீஸார் சார்பில் பல்வேறு விதங்களிலும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நெரிசல் குறைந்துள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தேவசம் போர்டு இணையதளத்தில் இம்மாதம் 7-ம் தேதியிலிருந்து 25-ம் தேி வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 10-ம் தேதி வரையும் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் புக்கிங் செய்து வருவதால், இம்மாத கடைசி தேதிகள் வரை நிறைவடைந்துவிட்டன. தேவசம் போர்டின் இந்த திடீர் சலுகையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.