குமுளி: சபரிமலையில் வழிதவறிய குழந்தைகளை எளிதில் கண்டறியும் வகையில் அவர்களுக்கு மின்னணு க்யூஆர் கோடுடன் கூடிய கைப்பட்டை அணிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர் மழையினால் சபரிமலை வனப்பகுதிகளில் அட்டைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
பம்பை கணபதி கோயிலுக்கு அருகில் காவல் சோதனைச் சாவடிக்கு அருகில் குழந்தைகளுக்கு கைப் பட்டைகள் அணிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் குழந்தையின் பெயர், பெற்றோர் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஞாபகத்திறன் குறைந்த முதியோர் உள்ளிட்டவர்களுக்கும் அணிவிக்கப்படுகிறது.
இந்த கைப்பட்டையை சுவாமி தரிசனம் செய்து வாகனங்களில் ஏறும் வரை அகற்றக் கூடாது என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சத்திரம் புல்மேடு வனப்பாதையில் மழையினால் அட்டைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆகவே பாதையை விட்டு விலகிச் செல்லாமலும், புல்பகுதிகளில் அமரவும் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், “மழை என்பதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் மழை கோட் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வனப்பகுதிகளுக்கு விட்டுச் செல்லக் கூடாது.
தற்போது அட்டைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு, ஷாம்பூ போன்றவற்றுக்கும் தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அட்டை உடலில் இருந்தால் இவற்றை போட்டால் கீழே விழுந்து விடும்” என்றனர்.
இந்நிலையில், நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் யானை கூட்டம் வந்தது. பக்தர்களைப் பார்த்ததும் வந்த வழியே அடர் வனப்பகுதிக்குள் மீண்டும் திரும்பிச் சென்றது.
வனத்துறையினர் கூறுகையில், “இது யானைகள் நடமாடும் பகுதிதான். ஆனால் பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியதும் இப்பகுதிக்கு வராது. ஆனால் பலரும் இங்கு சமையல் செய்து வருகின்றனர். மசாலா வாசனையால் கவரப்பட்டு இப்பகுதிக்கு வந்துள்ளது. தொடர் கண்காணிப்பில் இப்பகுதி உள்ளது” என்றனர்.