

குமுளி: சத்திரம் வனப்பகுதி நுழைவாயிலில் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளிர், விஷ ஜந்துக்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை பாதயாத்திரை பக்தர்கள் எருமேலி, சத்திரம் உள்ளிட்ட வனப்பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியே சந்நிதானத்துக்கு 12 கி.மீ. தொலைவில் சென்றுவிட முடியும் என்பதால், பலரும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். குமுளி அருகே வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சத்திரம் வனப்பாதையின் நுழைவுப்பகுதி அமைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்ல காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் நுழைவாயிலில் தங்க தனியார் மூலம் படுக்கை, கழிப்பிடம், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இங்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது வனப்பகுதி என்பதால், குளிரின் தாக்கத்துடன் அட்டைப் புழு, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, தரையில் இருந்து 3 அடி உயரத்தில் மரப்பலகையால் உயர்மட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதால், குளிரின் தாக்கத்திலிருந்தும் ஓரளவுக்கு தப்பிக்க முடியும். சில நாட்களுக்கு முன்பு இவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து தேசவம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், ‘தனியார் மூலம் படுக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தேவசம் போர்டு சார்பில் இங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம்’ என்றனர்.