குமுளி: சபரிமலை கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி மீனம் மாத (பங்குனி) பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கருவறை நடை திறக்கப்பட உள்ளது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறப்பார். அன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
மறுநாள் (மார்ச் 15) அதிகாலை முதல் 19-ம் தேதி வரை கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.
பின்பு 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே பக்தர்கள் தங்களுக்கான தரிசன தேதியை முன்பதிவு செய்து சபரிமலைக்கு வர வேண்டும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.