காங்கயத்தில் நடைபெற்ற ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியிட்டு விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி வி.வி. தனியரசு நூலை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர் கே.கதிரேசன் பெற்றுக்கொண்டார். உடன், நூலாசிரியரான தம்பிரான் ரிஷபானந்தர் உள்ளிட்டோர்.
திருப்பூர்: தம்பிரான் ரிஷபானந்தர் எழுதிய ‘ரிஷபானந்தரின் பொக்கிஷம் - பஞ்சபட்சி பஞ்சாங்கம் 2026’ நூல் வெளியீட்டு விழா திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள சிவன்மலை அடிவாரத்தில் அண்மையில் நடைபெற்றது.
கலைகளுள் மேன்மை பொருந்தியதாகப் போற்றப்படும் பஞ்சபட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதி தேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம் உள்ளது. இதை அறிந்திருந்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரத்தைக் கொண்டு, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.
பட்சி சாஸ்திரம், குருநாதரின் வழியாக சீடர்களுக்கு கூறப்பட்டு வந்தது. பார்வதி தேவி முருகப் பெருமானுக்கும், முருகப் பெருமான், அகத்தியர் போன்ற சித்தர்களுக்கும் இக்கலையை எடுத்துரைத்தனர். மேலும், பார்வதி தேவி நந்திதேவருக்கும் இக்கலையை பயிற்றுவித்தார். நந்திதேவர் மூலம் போகருக்கும், போகர் மூலம் உரோமரிஷிக்கும் இக்கலை பயிற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்நூலை திருச்சி குடும்ப நல நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.வி. தனியரசு வெளியிட்டார். திரைப்படத் தயாரிப்பாளர் ராஜபாளையம் கே.கதிரேசன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் பேசிய தம்பிரான் ரிஷபானந்தர் “புதிய ஆண்டின் தொடக்க நூலாக ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் எனது நூலை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் வெளியாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
விழாவுக்கு கோபுரம் பவுண்டேசன் நிறுவனர் ப.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பிரபல க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில், திருப்பூர் வடக்கு துணை வட்டாட்சியர் டி.அருள்குமார், வரலாற்று ஆசிரியர் கே.அண்ணாதுரை, தம்பிரான் குடில் அறக்கட்டளை நிர்வாகி பழனி எம்.சதிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியன் எக்ஸ் பிரஸ் குழுமத் தலைவர் விவேக் கோயங்கா வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். மொத்தம் 384 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.320. இந்நூலை https://store.hindutamil.in/publications என்ற ஆன்லைன் பக்கத்தில் பணம் செலுத்தி வாங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 7401296562 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.