கும்பகோணம்: மாசி மகாமகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோயில் திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் பங்கேற்று பந்தக்கால் நட்டு வர்ணம் பூசி தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மகாமக பெருவிழாவையொட்டி ரூ.2.93 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலில் உள்ள 16 விமானங்களிலும் திருப்பணி மேற்கொள்வதற்கான பாலாலயத்துக்கான பூர்வாங்க பூஜை கடந்த அக்.28-ம் தேதி தொடங்கியது.
அக்.29-ம் தேதி விஸ்வரூப தரிசனம், 3 வேள்வி காலங்களில் 7 குண்டங்களில் சிறப்பு ஹோமம், ராஜகோபுர, விமானங்கள் திருமஞ்சனம், முதல் மற்றும் 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று (அக்.30ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு திருவாராதனம், காலை 7.30 மணிக்கு பாலாலயம் பிரதிஷ்டை, தொடர்ந்து 9 மணிக்கு மேல் திருப்பணிக்கான பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களின் ஈசானிய மூலையில் பந்தக்கால் நட்டு திருப்பணி தொடங்கியது.
முன்னதாக, பந்தக்காலுக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், திருப்பணியில் பங்கேற்று மூலவர் கோபுரத்தில் வர்ணம் பூசி பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி, செயல் அலுவலர் சிவசங்கரி, பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.