ர.செல்வமுத்துகுமார்

ஆன்மிகம்

புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசையான இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

நீத்தார் வழிபாடு எனப்படும் முன்னோர்கள் வழிபாடு என்பது தமிழர்கள் வாழ்வியலில் இரண்டற கலந்த ஒன்றாக இருக்கிறது. முன்னோரை வழிபடும் தனக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் அவர்களது ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது தமிழர்களின் பெருநம்பிக்கையாக இருக்கிறது.

இதனால் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் புனித நீர்நிலைகளில் நீராடும் தமிழ்மக்கள், ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும் கூட ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடிய தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசை தினங்கள் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு அமாவாசை தினங்களில், ஆண்டு முழுவதும் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் தங்களது முன்னோரை வழிபடும்போது, அவர்கள் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் சென்றடையும் என்பது ஐதீகம்.

அதன்படி, புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், திருச்சி ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓயாமரி தில்லைநாயகம் படித்துறை, ஓடத்துறை படித்துறை ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் நீராடி, தங்களது மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர் அங்கிருந்த ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையே வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்கேஸ்வர்- அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT