திருச்செந்தூர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகைக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பின்னர், தங்களது வீடுகளுக்குச் சென்று பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்தாண்டும் மாலை அணிந்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வருகின்றனர்.
திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலை, திருநெல்வேலி சாலை, வள்ளியூர் சாலை, கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை என அனைத்து சாலைகளிலும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரை வருகின்றனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால், கடலில் நீராடி, நீண்டவரிசையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் பிரகாரங்கள், கடற்கரை, நாழிக்கிணறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.