திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வருடாந்திர வசந்தோற்சவம் வைகானச ஆகம விதிகளின்படி நடைபெறுவது வழக்கம். இவ்விழா நேற்று வெகு சிறப்பாக தொடங்கியது.
கோயிலில் நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர், மதியம் 2 மணியளவில் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக வெள்ளிக்கிழமை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இரவு 4 மாட வீதிகளில் தாயார் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாவது நாளான இன்று காலை வசந்தோற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் காலை 9.30 மணியளவில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வெள்ளிக்கிழமை தோட்டம் முழுவதும் சுமார் 15 வகை மலர்களால் 500 கிலோ பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.