ஆன்மிகம்

பழநி முருகன் கோயிலில் நவ.10-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்

நவ.15-ல் சூரசம்ஹாரம், நவ.16-ல் திருக்கல்யாணம்

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சி காலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை மற்றும் படையல் நைவேத்தியம் நடைபெறும்.

மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். மாலை 3 மணிக்கு சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் கோயில் சந்நிதி அடைக்கப்படும்.

தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகா சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானு கோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு ஆரிய மண்டபத்தில் வெற்றி விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று ஸம்ப்ரோட்சணம் மற்றும் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

விழா நிறைவாக நவ.16-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 8 மணிக்கு மேல் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT