திருமலை: திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருட சேவையை கண்டு களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை மாட வீதிகளில் வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் 5-வது சனிக்கிழமை என்பதாலும், தசரா விடுமுறை என்பதாலும், வாரக்கடைசி நாட்கள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை புஷ்பக விமானத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் கிருஷ்ணர் அலங்காரத்திலும் இரவு யானை வாகனத்திலும் மாட வீதிகளில் எழுந்தருளினார்.