திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி உடன் மலையப்பர் தங்க பல்லக்கில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, மாட வீதிகளில் கூடி இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, திருப்பதி நகரமும், திருமலையும் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருப்பதி நகரில் உள்ள 14 கூடல்களிலும் மிக அழகாக, ஆன்மிக காட்சிகளை மின்விளக்கு அலங்காரம் மூலம் மக்களை கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள், தோரணங்கள், கட்-அவுட்கள், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமலையே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரம் உட்பட பலிபீடம், கொடிக்கம்பம், உப சன்னதிகள் என அனைத்து இடங்களிலும் அழகிய மலர் அலங்காரங்கள், மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பெரிய சேஷ வாகனம்: நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.