கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து |
செற்றார் திறலழியச் சென்று செருகச்செய்யும் ||
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! |
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்! ||
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின் |
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட, ||
சிற்றாதே, பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ |
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
பசுக்களை வளர்த்து, அவை தரும் பாலைக் கொண்டு தயிர், வெண்ணை தயாரித்து, ஆயர்குலத்தினர் விற்பனை செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த செல்வ மகளே! புறத்தூய்மை, அணிகலன் துறப்பு, உணவுக் கட்டுப்பாடு, நாம சங்கீர்த்தனம், ஆகியவை பாவை நோன்பின் இயல்பாக கூறப்படுகிறது.
நம் சுற்றத்து பெண்கள் அனைவரும் உன் வீட்டு வாசலில் வந்து கார்மேக வண்ணனை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம். செல்வம், பெண்மையை புனிதமாக காப்பவளே! இந்த உறக்கத்தால் உனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று நினைக்கிறாய்? உடனே எழுந்து வா. நாம் அனைவரும் பரந்தாமனை பாடித் துதிப்போம் என்று தோழியை, கோதையின் தோழிகள் எழுப்புகின்றனர்
என்றும் சிவனருள் கிடைக்க வேண்டும்..!
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக் |
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி ||
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல் |
செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா! சிறு மருங்குல் ||
மையார் தடங்கண் மடந்தை மணவாளா! |
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் ||
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் |
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை)
சிவபெருமானே! உன்னை வணங்கும் அடியார்களாக நாங்கள் உள்ளோம். வண்டுகள் மொய்க்கும் மலர்களை உடைய குளத்தில் குதித்து, சப்தம் எழுப்பி, தண்ணீரில் நீந்தியபடி உன்னை, ‘பார்வதி மணாளன், சிவந்த நெருப்பைப் போன்றவன், உடலெங்கும் திருநீறு அணிந்தவன், செல்வத்தின் அதிபதி’ என்று புகழ்ந்து பாடினோம்.
காலம் காலமாக நாங்கள் பாவை நோன்பு கடைபிடிப்பதை நீ அறிவாய். யானை, சிலந்தி, பறவைகள் முதலானவற்றை நீ ஆட்கொண்டதும், அவற்றுக்கு என்ன நன்மைகள் கிடைக்குமோ, அவை அனைத்தும், உன் பெருமைகளைப் பாடுவதால் எங்களுக்கு கிடைத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. எங்களுக்கு எப்போதும் இந்த பேரின்பநிலை கிடைக்க அருள்புரிவாய் என்று தோழிகள் வேண்டுகின்றனர்.